வணக்கம்

நட்பெனும் நந்தவனத்தை
எந்தத் தீ நாவுகளாலும்
எரித்துவிட முடியாது

தொட்ட இடமெல்லாம்...... மனஹரன்



தோட்டத்திற்குப்
போக வேண்டும்

புன்னகையைக்
கையில் ஏந்தியபடி
வழி நெடுகிலும்
கனகாம்பர பூக்களாய்
காத்திருப்பார்கள்

வீட்டின் முன்
காய்த்திருக்கும்
இளநீர்வெட்டி
தாகம் தீர்ப்பார்கள்

கொல்லையில் அறுத்த
வாழைக்காயை
வறுக்கச்சொல்லி
அதன்
பதத்தையும் சொல்வார்கள்

மரத்தில் பழுத்திருக்கும்
மயிரு முளைச்சான்
பழங்களை
கொத்தாகப்பறித்து
தோல் நீக்கி
லக்கான்களை
பந்தி வைப்பார்கள்

எலுமிச்சைச் சாறு ஊரிய
சுண்ணாம்பு சேர்த்த
மீத மருதாணியை
வீட்டுக்குக்கும்
கொடுத்துவிடுவார்கள்

மாசமாக இருக்கும்
மனையாளுக்கு
நாகம்மா மருத்துவச்சியின்
நலம் விசாரிப்பு
எப்போதும் தொடரும்

மாலையில்
மாரியம்மா கோவிலில்
கெட்ட வார்த்தையில்
அர்ச்சனை செய்யும்
ஐயாக்கண்ணு பூசாரியின்
நக்கல் நாற்றமடிக்கும்

நினைக்க தெரிந்த
மனத்தை
மறக்கச் சொல்லி
பாடும்
மாரியின் குரல்
உடைந்து கேட்கும்

பிடுங்கிய
மரவள்ளி பிஞ்சின்
ஈரம் காயும் முன்
பல்லில் பட்டு
பால் ஊரும்

பின் வாசல் வழி
வரும்
அணில் கறி வாசத்தில்
ஒரு நேச கரம்
காரமாய் இருக்கும்


மீண்டும் தோட்டத்திற்குப்
போக வேண்டும்




No comments:

Post a Comment