வணக்கம்

நட்பெனும் நந்தவனத்தை
எந்தத் தீ நாவுகளாலும்
எரித்துவிட முடியாது

கவிதையில் இதுவெல்லாம் சகஜமப்பா….. -மனஹரன்

ஏதோவொரு நாற்றம்
வீட்டின்
உள்ளேயும் வெளியேயும்

அம்மா
சாக்கடை வீச்சம்
வயிற்றைப்
பிடுங்குகிறது என்றார்

கொஞ்சகாலமாய்
நாய்கள்கூட
குரைத்துக்கொண்டே
இருந்தன


பன்றி பண்ணை
புதிதாய்
தொடங்கியதாய்
யாரும் வந்து பதிந்து
கொள்ளவில்லை

ஒரு வாரமாய்
காணாமல் போன
எதிர்வீட்டுப் பூனை
செத்துப்போனதாக
எல்லாரும்பேசிக் கொண்டதை
குட்டிகளோடு வந்து
அது பொய்யாக்கியது

தொங்கல் தெருவில்
தினம் நிறுத்தி வைக்கப்படும்
இண்டா வாட்டர் லாரிதான்
காரணமாக இருக்கும் என
கவுண்சிலர் கணித்தார்

சில நாளாய்
இந்தப் பாதையில்
ஆள் நடமாட்டம்
மெல்ல குறைந்தது

புதிய நபர்களின்
வருகை
மெல்ல அதிகரித்தது

ஆட்களின்
எண்ணிக்கைக்கு ஏற்ப
சில வேளை
நாற்றம் வேகமாய்வீசும்

சிலர் இடமாற்றத்திற்கு
தயாராயினர்

கடைசியாய்
ஓய்வுபெற்ற
அரசியல்வாதி
அண்டைவீட்டுக்காரராக
குடியேறிய கதைதான்
கவிதையாய் மாறியது

தொட்ட இடமெல்லாம்...... மனஹரன்



தோட்டத்திற்குப்
போக வேண்டும்

புன்னகையைக்
கையில் ஏந்தியபடி
வழி நெடுகிலும்
கனகாம்பர பூக்களாய்
காத்திருப்பார்கள்

வீட்டின் முன்
காய்த்திருக்கும்
இளநீர்வெட்டி
தாகம் தீர்ப்பார்கள்

கொல்லையில் அறுத்த
வாழைக்காயை
வறுக்கச்சொல்லி
அதன்
பதத்தையும் சொல்வார்கள்

மரத்தில் பழுத்திருக்கும்
மயிரு முளைச்சான்
பழங்களை
கொத்தாகப்பறித்து
தோல் நீக்கி
லக்கான்களை
பந்தி வைப்பார்கள்

எலுமிச்சைச் சாறு ஊரிய
சுண்ணாம்பு சேர்த்த
மீத மருதாணியை
வீட்டுக்குக்கும்
கொடுத்துவிடுவார்கள்

மாசமாக இருக்கும்
மனையாளுக்கு
நாகம்மா மருத்துவச்சியின்
நலம் விசாரிப்பு
எப்போதும் தொடரும்

மாலையில்
மாரியம்மா கோவிலில்
கெட்ட வார்த்தையில்
அர்ச்சனை செய்யும்
ஐயாக்கண்ணு பூசாரியின்
நக்கல் நாற்றமடிக்கும்

நினைக்க தெரிந்த
மனத்தை
மறக்கச் சொல்லி
பாடும்
மாரியின் குரல்
உடைந்து கேட்கும்

பிடுங்கிய
மரவள்ளி பிஞ்சின்
ஈரம் காயும் முன்
பல்லில் பட்டு
பால் ஊரும்

பின் வாசல் வழி
வரும்
அணில் கறி வாசத்தில்
ஒரு நேச கரம்
காரமாய் இருக்கும்


மீண்டும் தோட்டத்திற்குப்
போக வேண்டும்






கவிதையும் நானும் - மனஹரன்

எனக்கு முன்னே
யாரோ ஒருவன் கவிதை
எழுதிக் கொண்டு இருக்கிறான்

ஒரு காதல் கவிதை

காதலில் வென்ற
காயங்களுக்கு
மருந்திட
இது உதவலாம்

காதலில் தோற்றவர்கள்கூட
இதனை ஒரு படி எடுத்து
புது தனி வியூகம்
அமைக்கலாம்

காதலை
இவ்வளவு கேவலமாய்
யாரும் சொல்லி
இருக்க மாட்டார்கள்

காதல் செய்ய
முடிவெடுத்தவர்கள்
தயவு செய்து
இனி
மேற்கு திசையில்
தலைவைத்து படுங்கள்
இவன் கிழக்கிலிருந்து
எழுதிக்கொண்டிருக்கிறான்

காதலில்
கொஞ்சம் கோபம்
மீறிப்போனால் முத்தம்
மிஞ்சிப்போனால் அழுகை
மூழ்கிப்போனால் ஏது மிச்சம்

இப்படிதான்
எழுதிக் கொண்டிருந்தான்

வள்ளுவர் வடித்த
கற்பு வாழ்வும்
களவு வாழ்வும்
இரண்டும்
ஒன்றென கொள்
என புதுக்குறள் எழுதினான்

காதலை
உதாசினப்படுத்திய
அம்பிகாவும் அமராவும்
லைலாவும் மஜ்னுவும்
தேவாவும் பாருவும்
அத்தியாயங்களிலும்
அவசியம் ஏற்பட்டால்
அகராதிகளிலும்
நீக்கப்பட வேண்டியவர்கள்
என குற்றம் சாட்டினான்

எங்கள் தோட்டங்களில்
இன்னமும் வாழும்
முனியும் காமியும்
ராமுவும் முனியும்
வீராவும் மணியும்
எல்லாருமே
காதலில் நின்றவர்கள்

நிஜங்களின் சுவடுகள்
நம் எதிர் வீட்டில்
நம் பின் வீட்டில்
நமக்குத் தெரிந்த வீட்டில்
தூரத்து உறவில்
எல்லா இடத்திலும் இருப்பார்கள்
அவர்களின்
வீட்டைத்த்தேடி
தேநீர்
அருந்த செல்லுங்கள்

கவிதையை
முடித்தும்
முடிக்காமலும்
அசவரமாய் இல்லை
அவசரமாய்
கீழே

என் பெயரை எழுதுகிறான்.

பிரமாஸ்திர வேர்கள் – மனஹரன்



இன்றுதான்
புதிதாய் பிறந்தேன்

உடல்மீது
பிசிபிசிக்கும்
ரத்த வாசத்தை
முகர முகர
மகரந்தங்களுக்குச்
சிறகுகள் முளைக்கின்றன

நான் கொஞ்சம்
வித்தியாசமானவர்

கர்ப்பக் குடத்திற்குள்
என்னை
சிறை வைக்கும்
முயற்சியை
இரண்டாம் மாதத்திலேயே
முறியடித்தேன்

பத்து மாத
காலஅளவை
பாதியாய் குறைக்க
விடுத்த விண்ணப்பம்
28-வது வாரத்தில்
விடைகொடுத்தது

நான் அழ பிறந்தவரல்ல
அழாமல் பிறந்த என்னை
அழவைத்து
உயிரை உறுதி படுத்தினர்

தொப்புள் கொடியை
அறுத்த ஆயுதத்தை
கைப்பற்றும்
முயற்சி தோல்வியானது

தாய்ப்பாலை
நிராகரித்தேன்

தாலாட்டுப்பாடல்கள்
என்னை பயமுறித்தன

பாரதி
என் முன்தோன்றினான்

முண்டாசை அவிழ்த்து
பாயாக்கினான்

மீசையைப் பீய்த்து
என் வாயினுள் போட்டான்

தீம்தரிகிட தீம்தரிகிட
தீம்தரிகிட தீம்தரிகிட

பாரதியின் பார்வை
என்னைச் சுட்டெரித்தது

நான்யார்?

பாரதியைக் கொன்றேன்

தாம்தரிகிட தாம்தரிகிட
தாம்தரிகிட தாம்தரிகிட

பீரிடும்
பாரதியின் ரத்தத்தை
மொண்டு குடித்தேன்

எனது முதல் கவிதை
வேர் விட்டது


ரோஜா தேவதைகள் - மனஹரன்



எல்லாரும் சொல்வதுபோல்
குழந்தைகள்
வெள்ளை தாள்கள் அல்ல
பல விசித்திர
வண்ணங்களின் கலவைகள்

நம் உருவாக்கிய
நிறங்களிலிருந்து
அவை மாறுபட்டவை

செல்லச் சிணுங்களில்
பல கோடி வார்த்தைகளை
நட்டுவிடும் நாத்துகள்

சிந்தும் புன்னகையில்
பூமியையே புரட்டிபோடும்

மழலை ஒலிக்குள்
பல மொழி அகராதிகளை
பதுக்கி வைக்கும்

காந்த விரல் தீண்டலில்
தீயள்ளி தின்னும்
சுகமிருக்கும்

கொட்டும் விழி மழையில்
கோபுரங்கள்
குடை சாயும்

சின்ன சின்ன
கோபங்கள்
புள்ளிகளாகி கோலங்களகாகும்


மின் பாதங்கள்
அணிவகுத்த மேனியெங்கும்
முள் இழந்த ரோஜாக்களின்
நடனமிட்ட ஸ்பரிசங்கள்

மெட்டி விரல்
தொட்ட இடமெல்லாம்
வண்ணத்துப்பூச்சி ஊர்ந்த
வலி இருக்கும்

இமைகள் விரியும்
நயனங்களில்
ஒருகோடி கவிதைகள்
காத்திருக்கும்

பொக்கை வாயில்
ஒழுகும் அமிர்தம்
ஆயுர்வேத தீர்த்தமாகும்

மெல்ல சுழலும்
மெல்லின நாவின்
நர்த்தன பாசைகள்

கெஞ்சிடும்போதும்
கொஞ்சிடும்போதும்
சில்லறை சிரிப்பில்
சிதைத்திடும் அழகு

எல்லா சொத்தையும்
மொத்தாமாய் எழுதி
காலடியில் வைப்பேன்

குழந்தையாக……