வணக்கம்

நட்பெனும் நந்தவனத்தை
எந்தத் தீ நாவுகளாலும்
எரித்துவிட முடியாது


கவிதையும் நானும் - மனஹரன்

எனக்கு முன்னே
யாரோ ஒருவன் கவிதை
எழுதிக் கொண்டு இருக்கிறான்

ஒரு காதல் கவிதை

காதலில் வென்ற
காயங்களுக்கு
மருந்திட
இது உதவலாம்

காதலில் தோற்றவர்கள்கூட
இதனை ஒரு படி எடுத்து
புது தனி வியூகம்
அமைக்கலாம்

காதலை
இவ்வளவு கேவலமாய்
யாரும் சொல்லி
இருக்க மாட்டார்கள்

காதல் செய்ய
முடிவெடுத்தவர்கள்
தயவு செய்து
இனி
மேற்கு திசையில்
தலைவைத்து படுங்கள்
இவன் கிழக்கிலிருந்து
எழுதிக்கொண்டிருக்கிறான்

காதலில்
கொஞ்சம் கோபம்
மீறிப்போனால் முத்தம்
மிஞ்சிப்போனால் அழுகை
மூழ்கிப்போனால் ஏது மிச்சம்

இப்படிதான்
எழுதிக் கொண்டிருந்தான்

வள்ளுவர் வடித்த
கற்பு வாழ்வும்
களவு வாழ்வும்
இரண்டும்
ஒன்றென கொள்
என புதுக்குறள் எழுதினான்

காதலை
உதாசினப்படுத்திய
அம்பிகாவும் அமராவும்
லைலாவும் மஜ்னுவும்
தேவாவும் பாருவும்
அத்தியாயங்களிலும்
அவசியம் ஏற்பட்டால்
அகராதிகளிலும்
நீக்கப்பட வேண்டியவர்கள்
என குற்றம் சாட்டினான்

எங்கள் தோட்டங்களில்
இன்னமும் வாழும்
முனியும் காமியும்
ராமுவும் முனியும்
வீராவும் மணியும்
எல்லாருமே
காதலில் நின்றவர்கள்

நிஜங்களின் சுவடுகள்
நம் எதிர் வீட்டில்
நம் பின் வீட்டில்
நமக்குத் தெரிந்த வீட்டில்
தூரத்து உறவில்
எல்லா இடத்திலும் இருப்பார்கள்
அவர்களின்
வீட்டைத்த்தேடி
தேநீர்
அருந்த செல்லுங்கள்

கவிதையை
முடித்தும்
முடிக்காமலும்
அசவரமாய் இல்லை
அவசரமாய்
கீழே

என் பெயரை எழுதுகிறான்.

No comments:

Post a Comment