வணக்கம்

நட்பெனும் நந்தவனத்தை
எந்தத் தீ நாவுகளாலும்
எரித்துவிட முடியாது

பிரமாஸ்திர வேர்கள் – மனஹரன்



இன்றுதான்
புதிதாய் பிறந்தேன்

உடல்மீது
பிசிபிசிக்கும்
ரத்த வாசத்தை
முகர முகர
மகரந்தங்களுக்குச்
சிறகுகள் முளைக்கின்றன

நான் கொஞ்சம்
வித்தியாசமானவர்

கர்ப்பக் குடத்திற்குள்
என்னை
சிறை வைக்கும்
முயற்சியை
இரண்டாம் மாதத்திலேயே
முறியடித்தேன்

பத்து மாத
காலஅளவை
பாதியாய் குறைக்க
விடுத்த விண்ணப்பம்
28-வது வாரத்தில்
விடைகொடுத்தது

நான் அழ பிறந்தவரல்ல
அழாமல் பிறந்த என்னை
அழவைத்து
உயிரை உறுதி படுத்தினர்

தொப்புள் கொடியை
அறுத்த ஆயுதத்தை
கைப்பற்றும்
முயற்சி தோல்வியானது

தாய்ப்பாலை
நிராகரித்தேன்

தாலாட்டுப்பாடல்கள்
என்னை பயமுறித்தன

பாரதி
என் முன்தோன்றினான்

முண்டாசை அவிழ்த்து
பாயாக்கினான்

மீசையைப் பீய்த்து
என் வாயினுள் போட்டான்

தீம்தரிகிட தீம்தரிகிட
தீம்தரிகிட தீம்தரிகிட

பாரதியின் பார்வை
என்னைச் சுட்டெரித்தது

நான்யார்?

பாரதியைக் கொன்றேன்

தாம்தரிகிட தாம்தரிகிட
தாம்தரிகிட தாம்தரிகிட

பீரிடும்
பாரதியின் ரத்தத்தை
மொண்டு குடித்தேன்

எனது முதல் கவிதை
வேர் விட்டது


No comments:

Post a Comment