வணக்கம்

நட்பெனும் நந்தவனத்தை
எந்தத் தீ நாவுகளாலும்
எரித்துவிட முடியாது

என் வானவில் நீ  -மனஹரன்

 








சிவப்பு
முதல் விரல் தொட்ட
ஸ்பரிசம்
சமிக்ஞை விளக்கின்
சிவப்பாய்
எனை நகரவிடாமல்
இப்போதும் நிறுத்துகிறது

ஆரஞ்சு
யாரும்
கேட்டிராத குரலில்
நீ செல்லமாய்
சினுங்கும் போதை
ஆரஞ்சு பழத்தோலின்
தெரிக்கும் நீர்மத்தின்
கொஞ்சல்

மஞ்சள்
நீராடிய ஈரத்தில்
காயாமல் வீசும்
மஞ்சளின் வாடை
எந்த மூலையிலும்
எனை தேடி
வசம் கொல்லும்

பச்சை
எந்த ஜவுளி கடையிலும்
பச்சை சேலை எடுத்து
தோளோடு அணைத்து
கண்ணாடியில்
பிழை இளைத்து
மெல்ல கரையும்
பொன் சிரிப்பில்
எல்லாவற்றையும் இழக்கும்

நீலம்
நீலக்கடல் சூழ்ந்த
தங்கத்தரையில்
ஆழ்கடலில் இல்லாமல்
மேலே மிதக்கும்
சிப்பி சிதைத்த
சிற்பமாய் நீ

கருநீலம்
இம்மொருமுறை
காமம் செப்பாது
தும்பியே
உன் இன்னொரு
இணையின்
கருங்கூந்தல்
எந்த ஷெம்புவின் விலாசம்

ஊதா
ஊதா பூந்தோட்டத்தில்
உட்கார்ந்த நீ
விழியின் குவியத்தில்
அரும்பாய் நனையாய்
முகையாய் மொக்காய்
முகிழாய் மொட்டாய்
போதுவாய் மலராய்
பூவாய் எல்லாமே நீ

வானவில்லில்
இன்னொரு
வர்ணமாய் நீ
வாழ்க்கை பின்னமாய் நீ


தனியாக உட்காரும் நாற்காலி 

- மனஹரன்

கோயில் வாசலில்
ஒரு ஜோடி காலணி
திருட்டுப் போகமல் இருக்க
பிரித்து விடுகிறார்கள்
சண்டாளர்கள் – கல்

வீட்டுச்சுவரில் மாட்டியிருந்த
தாத்தா பாட்டி படங்களில்
ஒன்றை மட்டும்
கீழிறக்கி
பூஜை போடுகிறார்கள்

உரசிக்கொண்டிருந்த 
அலமாரிகளை அகற்றி
தூசி தட்டி
இடைவெளியோடு
விட்டு விடுகிறார்கள்

ராவெல்லாம் ஒன்றாய்
இணைந்திருந்த கதவு
அகன்று விடை கொடுக்கிறது
இனி
இரவு வரும் வரை
விழி திறந்து காத்திருக்கும்

இரட்டைக்கிளவியைக்கூட
ரொம்ப காலமாய்
கரிகுல மேம்பாட்டு மையத்தினர்
பிரித்து ஆண்டிருக்கிறார்கள்

சீன உணவுக்குச்சிகள்
இரண்டாய்
ஜோடி சேர்த்து
எவரும் வைப்பதில்லை

ரெட்டாய் பிறந்த
வாழைப்பழத்தை
பிரிக்காமல்
எவனும் சாப்பிட்டதில்லை

இணையாய் வாங்கி வந்த
குத்து விளக்குகள்
மூலைக்கு ஒன்றாய்
ஒற்றைக்காலில்

தங்கக் கடைகளில்
உரசிக் கொள்ளும்
கம்மல்
செவிக்கு சென்றவுடன்
தூரப்பார்வையில்
ஏங்கி தவிக்கும்

இவ்வளவையும்
பிரித்துப் பார்க்கும்
மனிதனின்
காதல் மட்டும்
எப்போதும்
சேர வேண்டும் என்பதில்
என்ன நியதி.
வெந்து தனியட்டும்

வேர்களும் வேகட்டும்.
எங்கேயோ கேட்ட பாடல் 

- மனஹரன்

ஒரு உணவுக்கடையில்
குடும்பத்தோடு
உட்கார்ந்தபோது
அங்கும் இங்கும்
ஓடி விளையாடிய
மெலயு இளஞ்சிறுசுகள்
இருவர்
என் கரம் பிடித்து
சலாம் செய்து
முத்தமிட்டு சென்றதும்

கல்லூரி காலத்தில்
ஒரு பேருந்து நிறுத்தத்தில்
வயோதிக மாது ஒருவர்
டெக்சி நிறுத்தி
தோல்வியில் உட்கார
டெக்சி ஏற்றி
அனுப்பியபோது
வாழ்வில் எல்லா
செல்வம் பெற
வாழ்த்து மொழிந்ததும்

நள்ளிரவில்
டாமான் சாரா ஹைட்டில்
பணி முடிந்து
சாலையில் நடந்தபோது
நின்ற டெக்சியும்
பஸ் நிலையத்தில்
இறக்கிவிட்டு
தொடர் பயணத்திற்கு
பணம் உண்டாவென கேட்டு
வாங்கிய பணத்தில்
பாதியை
மீண்டும் எனக்கு
கொடுத்ததும்

என் மானசீக நந்தவனத்திற்கு
வந்தவளின்
முகம்கூட பார்க்காமல்
அவள் என்னவள் என்றதும்
பிறகு
அவளே என்னவளானதும்

ஏதொவொரு
சீனன் கடையில்
உணவு வாங்க
சென்றதுபோது
சீன மழலையொருத்தி
தன் தாயைவிட்டு
என்னுடன் வந்து
அவள்  மொழியில்
கதை அளந்ததும்
போகும்போது
அங்கிள் பாய்யென
சொல்லி
கையாட்டி சென்றதும்

எங்கோ சுற்றிந்திரிந்த
நாயொன்று
வாலாட்டி வந்ததும்
குட்டிகளை ஈன்று
வீட்டின் பக்கத்தில்
மரித்துபோனதும்

எல்லாவற்றிற்கும்
ஏதொவொரு
தொடர்பில்லாத
தொடர்புண்டு

விழிகளுக்குள்
அடங்காத காட்சி
இன்னும்
வழி நெடுகிலும்
வாழ்க்கை முழுவதும்
தொடரும்

அம்மா  - மனஹரன்

எனக்கு
உன்னைக் கொஞ்சம்
தெரியும்

கவிதை
உனக்கு நன்றாய் வரும்

அன்பே வா
அழைக்கின்ற எந்தன் மூச்சே
பாடல் முதல்
குமரி பெண்ணின் நேசம்
கோழி குழம்பு வாசம் வரை
மட்டுமல்ல
நய்யாண்டியில் வரும்
ஆளவெட்டி 
குழம்பு வெச்சிறுவாகூட
உனக்குப் பிடிக்கும்

நீ
மரபு வீச்சுகளைக்கூட
மனதளவில் நேசிக்கிறாய்
முயன்றால் 
முத்தெடுக்க முடியும்
ஏனோ மொத்தமாய்
நிராகரித்துவிடுகிறாய்
அதுவும் சத்தமாய்
சதுரங்கம் ஆடுகிறாய்

மின்னல் துன்பலையில்
தேவையில்லாமல் 
கெக்கரிக்கும்
எட்டுக்கும் பத்துக்கும்
கீழ்விழுந்த ஆறாய்
குரல் ஒலியால்
சினங்கொண்டு
சிலிர்த்துக்கொள்கிறாய்

படம் பார்க்கும்போதுகூட
நீ சிவப்பு பேனாவோடு
உட்காருவதாய்
எல்லாரும் புலம்புகிறார்கள்
இல்லையென்றால்
சீனு ராமசாமியின்
நீர்ப்பறவையில்
சைக்கள் முன் கம்பியில்
பைபலோடு சென்றவள்
பைபல் இல்லாமல் திரும்புவது
உன் 
கண்ணுக்கு மட்டும்தான் தெரிகிறது

உன்னையும்
பிரமிக்க வைத்த
பாரதிராஜாவின்
பொம்மலாட்டம்
இன்னும்
ஈரான் படமான
சொர்க்கத்தின் குழந்தைகள்
எல்லாமே 
உன்னை தோற்கடித்தன

ம்…. இன்னும் உண்டு
உம்மகள் இமையுடன்
நீ வென்றது குறைவு

உன் இல்லாளிடம்
தோல்வி கண்டதும்
அதிகம்தான்

உன் சொந்த வரிகளைக்கூட
பிறர் எடுத்தாண்டபோது
மௌனம் காக்கிறாய்

நான் யாரென்று
கேள்

ம்… நானே சொல்கிறேன்
நான்தான் வேறுயாருமல்ல

நான் உன் சேய்
நீ என் தாய் 

யாருக்கோ எழுதிய கவிதை

- மனஹரன்

இனிமேல் காயப்படாமல்
காய் நகர்த்த வேண்டும்

மரத்தை வெட்டிய பின்
மனு கொடுப்பது
எதனையும்
வேக வைக்காது
இன்னும்
ஆயிரம் மரம்
நட வேண்டும்

பதில் இல்லையென்றால்
நாளுக்கொரு கடிதம்
நகல் எடுத்து
அனுப்பவேண்டும்

நக நுனிகூட
காயப்படாத
திட்டத்தை
நுணுக்கமாக
செயலாக்கவேண்டும்

நம்மை
ஆணி அடித்து
நகரவிடாத
தோழர்கள்
நம்
கைக்குட்டையாய்
இருப்பார்கள்

நாம் முன்னெடுக்கும்
விலாசங்களுக்கு
தபால்தலைகளாய்
இருப்பதாய்
சத்தியம் செய்வார்கள்

முனகலுக்கெல்லாம்
அகராதி பார்த்து
புதிய தகவல்களை
முன்னெடுத்து வைப்பார்கள்

உனக்காக
பத்திரிகையில் வரும்
ராசிபலனெல்லாம் படித்து
எழுதியவர் மீது
வழக்குத் தொடுக்க
ஆயத்தமாவார்கள்

ஐந்து வருட
இடைவெளியில்
எதிர்கடை திறந்து
வாழ்த்து கேட்பார்கள்

நம் வாழ்க்கைக்கான வழிகள்
எந்தப் புத்தகத்திலும்
யாராலும்
எழுதப்படவில்லை
நம்முடன்
கைக்குலுக்கியவர்கள்
புன்னகைத்தவர்கள்
சேர்ந்து உண்டவர்கள்
உடன் உலா வந்தவர்கள்
நம்மிடம்
கற்றுக்கொண்டவைதான்
  
யார்அந்த நான்? 

– மனஹரன்


உன்னில்
என்னையே
நான் பார்க்கிறேன்

முதலில்
பனித்துளிகளில்
நனைவதாய்

கனகாம்பர
செவ்விதழ்களை
யாரோ
எம்மீது கொட்டுவதாய்

ஒருபிம்பம்

பிறகு ஒரு வெறுப்பு

என்னையே
எனக்குப் பிடிக்காத
நிலையில்
என்போல் இருக்கும்
உன்னை மட்டும்
எப்படி எனக்குப் பிடிக்கும்?

முகம்மட்டுமல்ல
என் முகவரியைக்கூட
பிறர் பயன்படுத்த
தடை விதித்தவன் நான்

நான் அணிந்திடும்
ஆடைகளை
எந்த ஒற்றனிடமிருந்து
கைப் பற்றினாய்?

நான் போட்டிருக்கும்
விழியாடியின் வடிவத்தை
எங்கிருந்து
நகல் எடுத்தாய்?

என் பற்களின்
வளி பயணிக்கும்
வழியை
எந்த பல் மருத்துவரிடம்
அளவு பெற்றாய்?

நான் முடிவாரும்
லாவகத்தை
எந்த வீடியோவில்
பார்த்து உணர்ந்தாய்?

நான் மீசையை
மளித்த விடயத்தை
மறு நொடி
உனக்கு
குறுஞ்செய்தி
அனுப்பிய கள்வன் யார்?

சரி
நான் எழுதும்
இந்தக் கவிதையை
நீயும்தான்
எழுதி இருப்பாய்?

நீ அனுப்பும் முன்னே
உன்னைக் கொன்று விடுகிறேன்

உடைந்த கண்ணாடியின்
ஒவ்வொரு துண்டிலும்
ஒரு நான்

இனி நான் என்ன செய்ய?








முகங்களை 



இன்னும் கொஞ்சம் பொறு
நெற்றியில் கட்டிய சத்தியம்
மெல்ல
கண்களுக்கு இறங்கும்
நேரம் வரும்
அதுவரை
கொஞ்சம் பொறு

சிவனின் பெயரில் செய்தால்
நெற்றிக் கண்ணால்
சுட்டெரித்து விடுவானென
மகனின் திருநாமத்தில்
தில்லாலங்கடித்தோம்

கற்றவர்கள்தான்
சமுதாயத்தைக்
கொள்ளையடிப்பதற்காகவே
பட்டம் பெற்றிருக்கிறார்கள்
வைரமுத்து சொன்னதுபோல்
கட்டிய கோவணத்தையும்
களவாடிவிடுவார்கள்

மந்திரியிடம்
தந்திரமாய்
வாங்கியநிதியை
மந்திரம் செய்து
மாயமாக்கி இருக்கிறார்கள்

மக்களின் நெற்றியில் போட்ட
பட்டை நாமத்தை
மறைக்கவே
சத்தியத்தின் பெயரில்
செவ்வாடை அணிவிப்பு

சல்லடையால்
சலித்தெடுக்கப்பட்டவர்கள்
வாகை சூடிய
கதை போதும்

வார்த்தைக்கும்
வாக்கியத்திற்கும்
கையேந்துபவர்களின்
விலாசங்களை
உங்களின்
சத்தியங்களுக்கு
போதிக்க வேண்டும்

அஞ்சிக்கும் கஞ்சிக்கும்
மனு கொடுப்பவர்களின்
இல்லத்திலும்
உங்களை தோற்கடிக்கும்
வல்லவர்கள் இருப்பார்கள்
முகவரி பற்றி
முன்னேற வையுங்கள்

கொஞ்சம்
நீங்கள் நின்ற
தடயங்களை
தேடி பாருங்கள்

நீங்கள் வந்த
பாதைகள்
உங்களுடைய தாய்
இருக்காது