இனிமேல் காயப்படாமல்
காய் நகர்த்த வேண்டும்
மரத்தை வெட்டிய பின்
மனு கொடுப்பது
எதனையும்
வேக வைக்காது
இன்னும்
ஆயிரம் மரம்
நட வேண்டும்
பதில் இல்லையென்றால்
நாளுக்கொரு கடிதம்
நகல் எடுத்து
அனுப்பவேண்டும்
நக நுனிகூட
காயப்படாத
திட்டத்தை
நுணுக்கமாக
செயலாக்கவேண்டும்
நம்மை
ஆணி அடித்து
நகரவிடாத
தோழர்கள்
நம்
கைக்குட்டையாய்
இருப்பார்கள்
நாம் முன்னெடுக்கும்
விலாசங்களுக்கு
தபால்தலைகளாய்
இருப்பதாய்
சத்தியம் செய்வார்கள்
முனகலுக்கெல்லாம்
அகராதி பார்த்து
புதிய தகவல்களை
முன்னெடுத்து வைப்பார்கள்
உனக்காக
பத்திரிகையில் வரும்
ராசிபலனெல்லாம் படித்து
எழுதியவர் மீது
வழக்குத் தொடுக்க
ஆயத்தமாவார்கள்
ஐந்து வருட
இடைவெளியில்
எதிர்கடை திறந்து
வாழ்த்து கேட்பார்கள்
நம் வாழ்க்கைக்கான வழிகள்
எந்தப் புத்தகத்திலும்
யாராலும்
எழுதப்படவில்லை
நம்முடன்
கைக்குலுக்கியவர்கள்
புன்னகைத்தவர்கள்
சேர்ந்து உண்டவர்கள்
உடன் உலா வந்தவர்கள்
நம்மிடம்
கற்றுக்கொண்டவைதான்


No comments:
Post a Comment